செல்வத்தைப் பெருக்க உதவும் 3 தங்க விதிகள்!

கையிலிருக்கும் பணத்தை பல மடங்காகப் பெருக்குவதற்கு மூன்று முக்கியமான தங்க விதிமுறைகளைப் பின்பற்றினால் போதும், நீண்டகாலத்தில் பெரிய கார்பஸ் தொகையை விரைவாகவும், எளிமையாகவும், சுலபமாகவும் உங்களால் சேர்க்க முடியும்.
அந்த மூன்று தங்க விதிகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
1. முதலீட்டுத் தொகை மிக முக்கியம்..!
பெரிய தொகுப்பு தொகையை உருவாக்கும் நிதி இலக்கைக் கொண்டிருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒருவருடைய வருமான ஆதாரத்தின்படி பார்க்கும்போது அவரால்
மாதம் ரூ.25,000 வீதம் மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறை மூலம் முதலீடு செய்ய முடியும். இருந்தாலும் அவர் வேண்டுமென்றே மாதம் ரூ.15,000 மட்டும்தான் முதலீடு செய்து வருவார். அவர்களுக்கு அந்த ரூ.10,000 இடைவெளி என்பது முதலீட்டில் எவ்வளவு பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பார். அவர் அறிந்து கொள்ளத் தவறிய தாக்கம் என்ன என்பதை நீங்கள் பாருங்கள்.
மாதம் ரூ.15,000 என்ற வகையில் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள். அது 15 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி அடைகிறது எனில், 20 வருட முடிவில் 2.3 கோடி ரூபாய் தொகுப்பு நிதியாக சேரும். ஆனால் 15,000 ரூபாயுடன் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் கூடுதலாக நீங்கள் சேர்த்து முதலீடு செய்து வந்தீர்கள் எனில் உங்களுடைய முதலீட்டின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத
அளவுக்கு உயர்ந்திருக்கும். மாதம் ரூ.15,000 மட்டும் எஸ்.ஐ.பியைத் தொடர்ந்து வந்தால் ரூ.2.3 கோடி கிடைக்கும் நிலையில் அதனை அதனுடன் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகித தொகையை கூடுதலாகச் சேர்த்து முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகளில் ரூ.4.17 கோடி தொகுப்பு தொகையாகக் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டை
10 சதவிகிதம் படிப்படியாக அதிகரிப்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு சாத்தியமான காரியம்தான். ஏனெனில் மாத சம்பளமாக இருந்தாலும் சரி, தொழில் செய்து சம்பாதிப்பவராக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வருமானம் குறைந்தது 10-15% ஏன் 20% கூட
செய்யுமே தவிர குறையாது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் முதலீட்டுத் தொகையைக் கூட்டி வந்தால் தொகுப்பு தொகை அப்படியே இரண்டு மடங்காக வளரும்.
உதாரணத்துக்கு ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.50,000 என்றும் அவர் இப்போது அவர் மாதம் 15,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார் என வைத்துகொள்வோம். இவருக்கு அடுத்த ஆண்டு சம்பளம் 10% அதிகரிக்கிறது என்றால் அவரின் சம்பளம் ரூ.50,000-லிருந்து ரூ.55,000 ஆக அதிகரிக்கும். அதேநேரத்தில் அவரின் எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையான ரூ.15,000-ஐ 10% சதவிகிதம் அதிகரித்தால் அது ரூ. 16,500 ஆக அதிகரிக்கும். சம்பளம் ரூ.5,000 அதிகரித்துள்ள எஸ்.ஐ.பி தொகையை ரூ.1,500 அதிகரிப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை தானே?
2. முதலீட்டுக் காலம்..!
செல்வத்தைப் பெருக்குவதில் எவ்வளவு காலத்துக்கு நாம் முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம் ஆகும். உதாரணமாக 15:15:15 என்ற விதிமுறைப்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துகொள்வோம். அதாவது மாதம் ரூ.15,000 என்ற வகையில், ஆண்டுக்கு சராசரியாக 15 சதவிகித வருமான வளர்ச்சி தரும் முதலீட்டுத் திட்டத்தில்
15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என வைத்துகொள்வோம். அப்போது 15 ஆண்டுகள் முடிவில் உங்களுடைய தொகுப்பு நிதி ரூ.1 கோடியாக இருக்கும். அந்த வகையில் பெரும்பாலானோருக்கு ரூ.1 கோடி என்பது மிகவும் எளிதாகச் சேர்க்கக்கூடிய ஒரு தொகைதான். ஆனால், நீங்கள்
இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் இந்த ரூ.1 கோடி தொகுப்பு நிதியை 8 மடங்காகப் பெருக்க முடியும். எப்படி எனில் முதலீட்டுக் காலத்தை அதிகரிப்பது மூலம் இது சாத்தியமாகும். 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 30 ஆண்டுகளாக முதலீட்டுக் காலத்தை அதிகரித்தால் உங்களுடைய தொகுப்பு தொகை ரூ.8 கோடியாக அதிகரித்திருக்கும். நீங்கள் முதலீடு செய்யப் போவது 15 ஆண்டுகள்தான் ஆனால் முதலீட்டை 30 ஆண்டுகள் வரை எடுக்காமல் வைத்திருந்தால் கூட்டு வட்டி வளர்ச்சி சக்தியினால் உங்களுடைய தொகுப்பு தொகை 8 மடங்கு உயர்கிறது.
நினைத்து பாருங்கள் ரூ.1 கோடி எங்கே இருக்கிறது?, ரூ.8 கோடி எங்கே இருக்கிறது?. இதுதான் நீண்ட கால முதலீடு மற்றும் கூட்டு வளர்ச்சி ஏற்படுத்துகிற மேஜிக் தாக்கம் ஆகும். எனவே முதலீட்டை முடிந்த வரை நீண்ட காலத்துக்கு தொடர்ந்தால் பல மடங்காக செல்வத்தைப் பெருக்க முடியும்.
3. வருமானம் எவ்வளவு?
நீங்கள் 15:12:15 என்ற விதிமுறைப்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதாவது மாதம் ரூ.15,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள். இங்கே
முதலீட்டுக்கான வருமானம் ஆண்டுக்கு 15 சதவிகிதம் என்பதற்கு பதில் 12 சதவிகிதம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால் உங்களுக்கு 15 ஆண்டு முடிவில் கிடைக்கக் கூடிய கார்பஸ்
ரூ.76 லட்சமாக மட்டுமே இருக்கும். வருமானத்தில் குறையும் 3 சதவிகிதம், கார்பஸில் 24 சதவிகிதத்தைக் குறைத்துவிடுகிறது. எனவே முதலீடு என்பது மிகவும் எளிமையான விஷயம்தான். ஆனாலும் அதை அவ்வப்போது
மறு ஆய்வு செய்து நிர்வகிக்க வேண்டியது அவசியம். உங்களால் மறு ஆய்வு செய்ய முடியாதபட்சத்தில் நிதி ஆலோசகர்களின் உதவியை நாடலாம். உங்களுடைய முதலீட்டில் வருமானம் குறையும்போது அதற்கு என்ன செய்யலாம்,
முதலீட்டில் என்ன மாற்றங்களைச் செய்யலாம், எதில் கூடுதலாக முதலீடு செய்து வருமான இழப்பை ஈடு செய்யலாம் என்று நிதி ஆலோசகர்கள் வழிகாட்டுவார்கள்.
இந்த மூன்று விதிமுறைகளையும் உங்களுடைய முதலீட்டில் மறக்காமல் பின்பற்றி வந்தால் நீண்டகாலத்தில் பெரிய தொகுப்பு நிதியை சுலபமாக உங்களால் உருவாக்க முடியும்.
ஆல் த பெஸ்ட்..!
