செல்வத்தை பெருக்க 5 சுலப வழி முறைகள்...!

ஒருவர் செல்வந்தர் ஆவது ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை. முக்கியமாக 5 வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் ஒருவர் சுலபமாக செல்வந்தர் ஆகிவிட முடியும். அந்த வழிமுறைகளை விரிவாக பார்ப்போம்.
1 சொத்தின் மதிப்பு வளர்ச்சி..!
ஒருவரிடம் எந்த வகையான சொத்துகள் (Assets) இருக்கின்றன? அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது மிக முக்கியம். ஒருவரிடம் ஒரு சொத்து இருக்கிறது என்றால் அதன் மதிப்பு எவ்வளவு என அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பார்க்காத பயிர் பாழ் என்பது போல் கவனிக்காத சொத்தும் பாழ்தான்.
விவரம் தெரிந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் மாத கடைசித் தேதிகளில் உற்சாகமாக இருப்பார்கள். காரணம், அப்போது அவர்களின் மொத்த சொத்தின் மதிப்பு என்ன என்பது பற்றிய கணக்கு போட்டு பார்த்திருப்பார்கள். அவர்கள் வைத்திருக்கும் தங்கம், பணம், சேமிப்புக் கணக்கில் இருக்கக்கூடிய இருப்பு, வைப்பு நிதி இருப்பு, பி.எஃப், பி.பி.எஃப். இருப்புத் தொகை, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இவற்றின் எல்லாவற்றின் இன்றைய மதிப்பு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அவர்கள் பார்த்திருப்பார்கள். ரியல் எஸ்டேட்டில் மட்டும் சரியாக மதிப்பு போட முடியாது. ஆனால், மற்ற முதலீடுகளின் மதிப்பை ஒரு முதலீட்டாளர் மதிப்பிட முடியும்.
சென்ற மாதத்துக்கும் இந்த மாதத்துக்கும் செல்வத்தின் பண மதிப்பு எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். கூடவே வங்கி சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, பி.பி.எஃப், தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் இப்படி எல்லாவற்றிலும் எவ்வளவு வளர்ச்சி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மாதந்தோறும் பார்க்க முடியவில்லை என்றாலும் மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டுக்கு ஒரு முறையாவது முதலீடுகளின் மதிப்பு எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை கவனித்து வர வேண்டும்.
2 வளரும் சொத்தை கண்டு பிடியுங்கள்..!
மேலே கூறப்பட்டபடி அலசி ஆராய்ந்தால், மிக முக்கியமாக, ஏழு வருடங்களுக்கு முன் எவ்வளவு இருந்தது, ஐந்து வருடங்களுக்கு முன் எவ்வளவு மதிப்பு, இப்படி வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, எவ்வளவு வளர்ச்சியை கொடுத்தது, தங்கம் எவ்வளவு வளர்ச்சியை கொடுத்தது என பார்க்க வேண்டும். இதேபோல், பி.பி.எஃப்., வைப்பு நிதி உள்ளிட்டவைகள் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.
அப்போதுதான் எந்தச் சொத்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை அறிந்து அதில் முதலீட்டை அதிகரித்து அதிக லாபம் ஈட்ட முடியும்.
இப்போது, ஏதாவது ஒரு வகையில் பணம் வருகிறது என்றால் அதை, எந்தத் திட்டத்தில் போட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்கிற முடிவை சுலபமாக எடுக்க முடியும்.
முதலீட்டில் வளர்ச்சி என்பது மிக முக்கியமானதாகும். அதை சரியாக கணக்கீடு செய்தால், மேற்கொண்டு சரியான திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
3 நீண்ட கால முதலீடு..!
ஒரே இரவில் யாரும் பணக்காரர் ஆக முடியாது. ஒருவர் கடன் வாங்காமல் மற்றும் வாழ்க்கைமுறை செலவுகளை சுலபமாக செய்ய வேண்டும் என்றால் அவரின் முதலீட்டின் மூலம் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைப்பது அவசியமாகும்.
நீண்ட காலத்தில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து வரும் ஆண்டுக்கு சராசரியாக போது 12-15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்பது ஒரு டைனமிக் முதலீடாகும். பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் போது, லாபத்தை வெளியே எடுக்க வேண்டும். பங்குச் சந்தை கீழே இறங்கும்போது முதலீடு செய்ய வேண்டும். அடிப்படையில் வலுவான நல்ல தரமான பங்குகளில் இப்படி செய்யும் போது நீண்ட காலத்தில் நல்ல வரும் கிடைக்கும். முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் லார்ஜ் கேப் பங்குகள் எனப்படும் மிகப் பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரலாம். பங்குச் சந்தையில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை மேற்கொண்டு வருவார். அங்கு இருக்கும் நிதி மேலாளர் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை சரியாக கணித்து முதலீட்டை மேற்கொண்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவார்.
4 சீரான முதலீட்டு முறை..!
பங்குச் சந்தையின் செயல்பாட்டை சாதாரண சிறு முதலீட்டாளர்களால் சரியாக கணிப்பது என்பது மிகக் கடினமாகும். அந்த வகையில் பங்கு மற்றும் ஃபண்ட்களில் சீரான முதலீட்டு முறை என்கிற எஸ்.ஐ.பி முறையில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கை கணிசமாக குறைக்க முடியும். மேலும் நீண்ட காலத்தில் நல்ல லாபத்தையும் பெற முடியும்.
மொத்தப் பணம் இருந்தால், அதனை ரிஸ்க் இல்லாத லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து விட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் என்கிற எஸ்டிபி முறையில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களுக்கு முதலீட்டை சீரான இடைவெளியில் குறிப்பிட்டக் காலத்துக்கு மாற்றுவது நல்லது. இப்படி செய்யும் போது பங்குச் சந்தையின் ரிஸ்க் வெகுவாக குறையும்.
5 அஸெட் அலோகேஷன்...!
ஒருவர் அதுவும் சிறு முதலீட்டாளர் எப்போது, எந்தச் சொத்து பிரிவு அதிக வருமானத்தை தரும் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டமான காரியம் ஆகும்.
ஒருவர் அவரின் நிதி இலக்கு, ரிஸ்க் எடுக்கும் காலம், முதலீட்டுக் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, வைப்பு நிதி, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பணத்தை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில், கிரிப்டோ, என்.எஃப்.டி., ஷேர் டிரேடிங் உள்ளிட்டவைகளை சிறு முதலீட்டாளர்கள் தவிர்ப்பது நல்லது. இவை மிக அதிக ரிஸ்க்கானவை மற்றும் புரிந்துகொள்ள மிகவும் கஷ்டமானவையாகும். எது எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் நல்ல வளர்ச்சியை பெற முடியும்.
அனுமதி இல்லாத சிட் ஃபண்ட். என்பது யாரோ ஒருவர் நடத்துகிறார். அவர் திடீரென்று காணாமல் போய்விடுவார். அல்லது அவரிடம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதனால், பிரச்னை நமக்குத்தான். அதனால், பதிவு செய்யாத சிட் ஃபண்ட்களில் ஒரு போதும் முதலீடு செய்யாதீர்கள்.
இறுதியாக, பண வளர்ச்சிக்கு நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும். அதுவும் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும். மிக முக்கியமாக பொறுமை மிக முக்கியம். பங்குச் சந்தையின் உண்மை நிலையை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். உங்கள் முதலீட்டுக் கலவையில் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்கள் இல்லை என்றால் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைக்காது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப முதலீடுகளை பிரித்து முதலீடு செய்து வருவது அவசியமாகும்.
பாக்ஸ்
இந்திய நிறுவனப் பங்குகளே போதும்..!
தற்போதைய நிலையில் இந்தியாவை தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. வெளிநாடுகளை விட அடுத்த ஏழு, எட்டு வருடத்திற்கு இந்தியாவில் நல்ல வளர்ச்சி உள்ளது. இந்தியாவில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது லாபகரமாக இருக்கும்.
