தங்கத்தில் எப்படி முதலீடு செய்தால் லாபம் அதிகம்?
இந்தியாவை பொறுத்த வரையில் தங்கம் பாரம்பரிய முதலீடுகளில் முக்கியமான ஒன்று ஆகும். தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக தங்கம் மதிப்புமிக்க உலோகங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் இருந்து வரும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு புகலிடமாக தங்கத்தில் செய்யப்படும் முதலீடு பார்க்கப்படுகிறது. மேலும், குழந்தை பிறப்பு தொடங்கி, திருமணம், பண்டிக்கைகள் என பல்வேறு சூழ்நிலைகளில் தங்கம் நம் கலாச்சாரத்துடன் இணைந்துள்ளது. இப்படி பாரம்பரியமாக மக்களின் உணர்வுகளுடன் கலந்துள்ள தங்கத்தில் எப்படி எல்லாம் முதலீடு செய்யலாம்? அப்படி செய்யும் முதலீடுகளில் எது சிறந்தது? எது லாபகரமானது? என பார்க்கலாம்.
அதிக இருப்பு..!
உலக அளவிலுள்ள தங்கத்தின் இருப்பில் சுமார் 11% இந்தியாவில் உள்ளது. இதுவே இந்திய மக்கள் எந்த அளவுக்கு தங்கத்தை சிறந்த ஒரு முதலீடாக பார்க்கின்றனர் என்பதற்கு சிறந்த உதாரணம் எனலாம். குறிப்பாக தமிழ் கலாச்சார பண்பாட்டை பார்க்கும் போது பல நூறாண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்துள்ளதை அறிய முடியும். அந்தளவுக்கு மக்களின் பாரம்பரியத்துடன், உணர்வுகளுடன் கலந்துள்ள முதலீடாக இருந்து வருகிறது.
4 வகையான முதலீடுகள்..!
தங்கத்தை பொறுத்த வரையில் 4 வகையாக வாங்கலாம்.
1. தங்க நகைகள்
2. பிசிக்கல் தங்கம் (நாணயம், கட்டி)
3. டிஜிட்டல் தங்கம் ( கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப்.)
4.தங்க பத்திரம்
தங்க நகைகள்..!
தங்க நகையை பொறுத்த வரையில் சிறந்த முதலீடாக மட்டும் அல்லாமல், சமுதாயத்தில் அஸ்தஸ்தை காட்டும் ஓர் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. இதற்காக பலரும் தங்கள் சேமிப்பில் பெரும்பகுதியை செலவிடுகின்றனர். சிலர் இதற்காகவே சீட்டு போட்டு கொஞ்சமாவது தங்கம் வாங்கி விட வேண்டும் என முதலீடு செய்கின்றனர்.
சேமிப்பு என்பது நல்ல விஷயம் தான் என்றாலும், இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களும் உள்ளன.
ஆபரணமாக வாங்கும்போது குறைந்தபட்சம் 10% முதல்15% செய்கூலி, சேதாரமாக வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 1 லட்சம் ரூபாய்க்கு தங்க நகை வாங்கிகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதில் 10% சேதாரம் மற்றும் செய்கூலி செலவு என்றால் கூட, நமக்கு 90,000 ரூபாய் மதிப்புக்கு தான் தங்கம் கிடைக்கிறது. இது மட்டும் அல்ல 3% ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும். ஆக மொத்தம் 13 -18% தங்கம் வாங்கிய உடனே அதன் மதிப்பு குறைந்து விடுகிறது. அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனில், அதற்கு வங்கி லாக்கர் கட்டண செலவு இருக்கிறது.. ஆக அணிந்து அழகு பார்ப்பதற்கான தங்கத்தை மட்டுமே ஆபரணமாக வாங்க வேண்டும். முதலீட்டு நோக்கில் தங்க நகை வாங்குவது லாபம் இல்லை.
பிசிக்கல் வடிவம்..!.
தங்க நகையும் பிசிக்கல் வடிவம் தானே என்ற கேள்வி பலருக்கும் எழலாம். தங்க நகையாக வாங்கும்போது அதன் தரம் பற்றி கவலை இருக்கும். ஆனால் தங்க நாணயமாகவோ அல்லது தங்க கட்டியாகவோ வாங்கினால் தரம் பற்றிய கவலை தேவையில்லை. ஏனெனில் அது 24 கேரட் தூய தங்கமாக இருக்கும். ஹால்மார்க் முத்திரையும் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இதில் செய்கூலி,சேதாரம் என இருக்காது. எனினும் இதிலும் ஜி.எஸ்.டி வரி 3% இருக்கும். இந்தத் திட்டத்திலும் லாக்கர் பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆக இதிலும் லாக்கர் கட்டண செலவு இருக்கிறது. எப்படி இருப்பினும் ஆபரண தங்கத்துடன் ஒப்பிடும்போது, தங்க நாணயம் அல்லது தங்க கட்டி சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தங்கம்..!
இன்றைய காலகட்டத்தில் சிறிய பால் கடை தொடங்கி, மளிகை கடை வரையில் டிஜிட்டல் பண பரிவத்தனைகள் அதிகரித்து விட்டன. இப்படி அடிப்படை தேவைகளுக்கு மட்டும் அல்ல, தங்கத்தை கூட டிஜிட்டல் பேமெண்ட் தளங்களில் வாங்கி கொள்ள முடியும். அதையும் குறைந்த அளவிலான முதலீட்டில் கூட செய்து கொள்ள முடியும். அதன் தரம் என்பது பிரச்சனை இருக்காது. பாதுகாப்பு இருக்கும். உங்கள் முதலீட்டுக்கு ஏற்ப உங்களது கணக்கில் தங்கமாக வரவு வைக்கப்படும். சில தளங்களில் இதற்கு கட்டணம் இருந்தாலும், அது ஆபரண நகை, தங்க நாணயம், கட்டி வாங்குவதை விட செலவு குறைவாகவே இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் கோல்டு பீஸ், கோல்டு இடிஎஃப், கோல்டு சேவிங்ஸ்ஃபண்டுகள் என பல வகைகளில் தங்கத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். மேற்கண்ட திட்டங்களும் சிறந்த தங்க முதலீட்டு திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. காரணம், இவற்றில் முதலீட்டுக்கான செலவு சுமார் 1-2% என குறைவாக இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி கிடையாது.
அரசு தங்க பத்திரங்கள்....!
மேற்கண்ட பல திட்டங்களை காட்டிலும் அரசு தங்க பத்திரங்கள் என்பது மிக சிறந்த பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தப் பத்திரம் மத்திய அரசு சார்பில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகிறது. இந்தப் பத்திர திட்டம் வருடத்தில் சுமார் 4 முறையாவது வெளியிடப்படுகிறது.
இந்த திட்டத்தில் தங்க பத்திரத்தை டிஜிட்டல் வடிவில் வாங்கி வைக்கிறோம். அடுத்ததாக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதால் இறையாண்மை தன்மை கொண்டதாகவும் உள்ளது. அத்துடன் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தங்க பத்திரத்தின் மதிப்பும் அதிகரிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அரசு ஆரம்ப முதலீட்டுக்கு வருடத்திற்கு 2.5% வட்டியும் கொடுக்கிறது. ஆக தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க அதிலும் லாபம். வட்டி வருமானமும் கிடைக்கிறது. இந்தப் பத்திரங்களின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகளாகும். எட்டு ஆண்டுகள் முதலீட்டை தொடர்ந்து லாபத்துக்கு எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. மொத்தத்தில் சிறந்ததொரு தங்க முதலீட்டு விரும்பமாக இந்தத் தங்கப் பத்திரம் பார்க்கப்படுகிறது.
