லாபத்தில் தங்கம், பங்குச் சந்தை எதிர்காலத்தில் எது அதிக லாபம் கொடுக்கலாம்..? எது பெஸ்ட்?
தங்கம் விலை கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. வரும் ஆண்டுகளிலும் இந்த ஏற்றம் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எதிர்காலத்தில் தங்கம், பங்குச்சந்தை முதலீட்டை விட அதிக லாபம் கொடுக்குமா? முதலீட்டுக்கு எது பெஸ்ட் ஆக இருக்கும் என்ற கேள்வியும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அண்மைக் காலத்தில் ஏற்ற இறக்கமாக இருக்கும் 2024 அக்டோபர் 22-ம் தேதி, தங்கத்தின் விலை 22 காரட் ஒரு கிராம் ரூ.7,300க்கு அதிகரித்துள்ளது. அதாவது பவுன் (8 கிராம்) ரூ.58,400 ஆக உயர்ந்துள்ளது.
நவீன முதலீடுகள்..!
கடந்த 15, 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் பார்க்கும்போது நம்மவர்கள் ஃபிக்சட் டெபாசிட் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அந்த காலகட்டங்களில் நவீன முதலீடுகளான பங்குச் சந்தை முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்டுகள் அவ்வளவு பிரபலம் இல்லை என்றே கூறலாம். சொல்லப்போனால் பங்குச் சந்தை என்றாலே அது ஒரு சூதாட்டம் என்ற கருத்து இருந்து வந்தது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு பங்குச் சந்தை முதலீடுகளான நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அனைவரும் விரும்பும் சிறந்த முதலீடாக மாறி இருக்கிறது. அது உண்மை என்று கூறும் விதமாக சின்ன சின்ன இறங்கங்கள் இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக பங்குச் சந்தையானது தொடர்ந்து உச்சம் எட்டி வருகிறது.
தொடர்ந்து தங்கம் மற்றும் பங்குச் சந்தை நல்ல லாபம் கொடுத்து வருகிறது.
தங்கம் மற்றும் பங்குச் சந்தை சமீப காலமாக அதிக வரும் தரும் சூழலை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது, நீண்ட கால அடிப்படையில் லாபகரமான ஒன்றாக இருக்காது.
விலை அதிகரிப்பு..!
கடந்த மூன்று வருடங்களாக தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தொடர்ந்து எதிர்காலத்தில் அதிகரிக்க மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று அமெரிக்க மத்திய ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தை குறைக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் 0.5% குறைக்கப்பட்டது. இது இன்னும் ஓராண்டில் மேலும் 1% குறைக்கப்படலாம் என்ற வலுவான எதிர்பார்ப்பு உள்ளது. அதை தொடர்ந்தும் வட்டி குறைக்கப்படலாம் என்ற கருத்தே உள்ளது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையானது அமெரிக்க டாலர் மதிப்பை குறைக்கலாம். இது டாலரில் தங்கத்தை வாங்குபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையலாம். தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
தங்கம் வாங்கி குவிக்கும் நாடுகள்!
சமீபத்திய வருடங்களாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு நாடுகளில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மத்தியில், பாதுகாப்பு கருதியும், பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தை வாங்கி பல்வேறு நாடுகளும் ஹோல்டிங் செய்து வருகின்றன.
குறிப்பாக சீனா, இந்தியா, சிங்கப்பூர், ரஷ்யா, டர்க்கி போன்ற நாடுகள் அதிக அளவில் தங்கத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதுவும் தங்கம் விலை நீண்ட கால அடிப்படையில் உச்சத்தில் இருக்க வழிவகுக்கலாம்.
தேவை அதிகரிப்பு?
தொடர்ந்து தங்கத்தின் தேவையானது அதிகரித்து வரும் சூழலில், அதே அளவுக்கு உற்பத்தி இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் தங்கத்தின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 10% அதிகரித்து வருகிறது என்றால், தேவை 40 –50% அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது. ஆக அதிகரித்து வரும் தேவை விலை அதிகரிப்பை தூண்டலாம்.
நிலவி வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் பாதுகாப்பு கருதி, தங்கத்தை வாங்கி வைத்து வருகின்றன. இந்தப் போக்கு தொடரும் என்ற நிலையே காணப்படுகிறது. இதுவும் தங்கம், நீண்ட கால அடிப்படையில் லாபகரமான முதலீடாக இருக்க காரணமாக இருக்கலாம்.
ஏற்றம் தொடருமா?
எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து லாபத்தை மட்டுமே கொடுத்து கொண்டிருக்குமா? என்றால் நிச்சயம் இல்லை. தங்கமும் அப்படித்தான். கடந்த 2012–2018 வரையிலான ஆறு ஆண்டுகளில் எதிர்மறையான லாபத்தை பதிவு செய்தது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் மதிப்பு அதிகமாக காணப்பட்டது என கூறப்படுகிறது. ஆக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தொடர்ந்து, அனைத்து முதலீடுகளையும் தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யக் கூடாது.
அண்மைக் காலத்தில் பங்குச் சந்தை அதிக லாபம் கொடுத்து கொண்டுள்ளது. தொடர்ந்து உச்சம் எட்டி வருகிறது. இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கலாம் என அனைத்து முதலீட்டையும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களிலும் செய்யக் கூடாது. பங்குச் சந்தை 2008 உலக நிதி நெருக்கடி, 2020 கோவிட் பாதிப்பு உள்ளிட்ட பல காலக் கட்டங்களில் அதிக வீழ்ச்சி சந்தித்துள்ளது.
எனவே, இந்த இரண்டு சொத்து பிரிவுகளில் மட்டுமே மொத்த முதலீட்டையும் மே மிக தவறான ஒன்று. இவை தொடர்ந்து ஏற்றம் காணும் என்றும் சொல்ல முடியாது,.
சரியாக எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
முதலீட்டுக் கலவையில் (Portfolio), கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் (ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள்), பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், தங்கம் (டிஜிட்டல் கோல்டு – கோல்டு இ.டி எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்), ரியல் எஸ்டேட் (மனை, வீடு, ரெய்ட், இன்விட்) என பிரித்து முதலீடு செய்வது நல்லது. அதில் தங்கத்தில் எவ்வளவு? ரியல் எஸ்டேட் எவ்வளவு? பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் எவ்வளவு? கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் எனத் திட்டமிட வேண்டும். ஏற்கனவே தங்கத்தில் 10% முதலீடு செய்துள்ளதாக வைத்துக் கொள்வோம். இது அதிகபட்சமாக 20%-ஐ தாண்டாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். விலை அதிகரிக்கிறது என்பதற்காக இஷ்டத்துக்கு வாங்கி போடாமல், உங்கள் போர்ட்போலியோ-ன் நிலை என்ன? நெட்வொர்த் என்பதை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட வேண்டும்.
மேலும், ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம், நிதி இலக்குகள் ஆகியவற்றுக்கு ஏற்ப முதலீட்டை பிரித்து மேற்கொள்வது அவசியமாகும். இப்படி பிரித்து முதலீடு செய்வதில் குழப்பம் இருந்தால், பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம் / வெள்ளி, ரியல் எஸ்டேட்டில் கலந்து முதலீடு செய்யக் கூடிய மல்டி அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். தேவைப்பட்டால் முதலீட்டு ஆலோசகர் உதவியை எடுத்துகொள்ளலாம்.
