4 Simple Ways To Achieve Financial Compatibility With Your Spouse
தம்பதிகள் இடையே பணப் பிரச்னை வராமல் இருக்க..!

நீங்கள் நினைப்பதை விட பண விவகாரங்கள், உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் துணைவர் (கணவர்/மனைவி) தனது பணத்தை எவ்வாறு செலவிடுகிறார், சேமிக்கிறார் மற்றும் முதலீடு செய்கிறார் என்பது உங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதாவது, வேலை பார்க்கும் தம்பதிகளில் கணவர் கண்டபடி இஷ்டத்துக்கு செலவு செய்கிறார் என்றால், குடும்ப செலவுகளுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் அவசிய செலவுகளுக்கு மனைவி தன் வசம் இருக்கும் பணத்தை அதிகமாக செலவு வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். இதனால், தம்பதிகளுக்கு இடையே பணப் பிரச்சனை வருகிறது.
எனவே, உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் பண விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ அல்லது ஏற்படுவது போன்ற சூழ்நிலை உருவானாலோ, தம்பதிகள் இடையே நிதி இணக்கத்தை (Financial Compatibility) அடைய நீங்கள் என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
1 தகவல் பரிமாற்றம் மிக அவசியம்..!
தம்பதிகள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ளாததே தம்பதிகளிடையே பெரும்பாலான நேரங்களில் மோதல்கள் ஏற்பட காரணமாகின்றன, உங்கள் நிதி இலக்குகள், கடன்கள், செலவு செய்யும் பழக்கம் போன்றவற்றைப் பற்றி துணையுடன் வெளிப்படையாக இருங்கள்.
இது உங்களுக்கு ஏதேனும் பணப் பிரச்னை வந்தால் அதனை சுலபமாக சமாளிக்க உதவும். உதாரணமாக, உங்கள் துணைவர் வெளியே சென்று உணவகத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃபாஸ்ட்புட் வகைகளை அடிக்கடி உண்ண விரும்புகிறார்; நீங்களோ வீட்டில் சமைத்த உணவை சாப்பிட விரும்புகிறீர்கள். இந்த எண்ணத்தை உங்களுக்குள்ளே வைத்துக் கொண்டால் பணம் தேவையில்லாமல் அதிகம் செலவாவதோடு, உடல் நலனுக்கும் கெடும். இந்த நிலையில் கணவன் – மனைவி தங்களுக்குள் மனம் விட்டு பேசி, மாதம் ஒருமுறை மட்டுமே வெளியில் சென்று சாப்பிடுவது என்கிற முடிவுக்கு வர முடியும். அல்லது ஓட்டலில் கணவர் விரும்பி சாப்பிடும் உணவு வகையை மனைவி வீட்டிலேயே தயாரித்து கொடுக்க முடியும். கருத்து வேறுபாடும் களையப்படும்.
2 இணைந்து பட்ஜெட் போடுங்கள்..!
தம்பதிகளில் ஒருவர் சிக்கனமாக செலவு செய்பவராக இருப்பார்; இன்னொருவர் அதிகம் செலவு செய்பவராக இருப்பார். இந்த நிலையில் சம்பாத்தியம் எல்லாம் எங்கே செல்கிறது என்பதை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கும். இதனால், தம்பதிகள் இடையே தகராறு வரக் கூடும்.
இது போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க கணவன், மனைவி இருவரும் இணைந்து குடும்ப பட்ஜெட்டை போடுவது முக்கியமாகும். இப்படி செய்யும் போது யார் தேவையில்லாமல் அதிகம் செலவழிக்கிறார்கள்?, யார் செலவை குறைக்க வேண்டும் என்பது தெரிய வரும்.
3 மற்றவரின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள்..!
துணைவர் தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் பெரும் தொகையை முதலீடு செய்யும் போது அல்லது செலவழிக்கும் போது மற்றவர் மனதளவில் காயம் அடைகிறார்; உள்ளூக்குள் கோபப்படுகிறார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே பிரச்னையை பெரிதாக்க கூடும்.
சிலர் இதனை அவமரியாதையாக கூட கருத்துகிறார்கள்.மேலும் இந்தச் செயல் பரஸ்பர நம்பிக்கையை இழக்க வழிவகுக்கிறது. அந்த வகையில் முக்கியமான மற்றும் பெரிய முதலீடுகள் மற்றும் செலவுகளை மேற்கொள்ளும் போது உங்கள் துணைவருடன் கலந்தாலோசிப்பது முக்கியமானதாகும். மேலும். எப்போதும் இது போன்ற நிலைகளில் இருவரும் கலந்து ஆலோசித்து இருவருக்கும் ஏற்ற பொதுவான ஒரு முடிவை எடுப்பது எப்போதும் நல்லது.
மனைவி, குடும்பத் தலைவியாக மட்டும் இருக்கும் போது, பல நேரங்களில் கணவர் அவரிடம் கருத்து எதுவும் கேட்பதில்லை. இது மிகவும் தவறாகும் இருவரும் ஒன்றாக அமர்ந்து எடுக்கத் திட்டமிடும் நிதி முடிவுகளைப் பற்றி விவாதிக்கவும். பணத்தை முதலீடு செய்வதாக இருந்தாலும் செலவழிப்பதாக இருந்தாலும் சரி கலந்து பேசி முடிவு செய்யுங்கள்.
வேலை பார்க்கும் தம்பதிகள் என்கிற போது, இப்படி செய்யும் போது, மற்றவரின் பணம் எங்கு செல்கிறது என்பதை தம்பதிகள் இருவரும் அறிய முடியும். ஒருவரின் கருத்தை மற்றவர் ஏற்கவில்லை என்றால், ஒரு பொதுவான முடிவைக் கண்டறிவது சிக்கலை தவிர்க்க உதவும்.
4 நிதி நிபுணரின் ஆலோசனை:
வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல், அனைத்து தம்பதிகளும் பணப் பிரச்னைகளால் தங்கள் உறவில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். எனவே, பண விஷயத்தில் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்க வெட்கப்பட வேண்டாம்.
தம்பதிகள் தங்களின் நிதிச் சிக்கல்களை நிதி நிபுணரிடம் எடுத்து சொல்லி அவரிடம் தீர்வு கேட்கலாம்; பொதுவாக, நம்மில் பலர் மூன்றாம் நபர் சொல்வதை கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.. இது பிரச்னைக்கு தீர்வு காண உதவிபுரிவதோடு, தம்பதிகளின் பணப் பழக்க வழக்கங்கள் மற்றும் நிதிப் புரிதலை மேம்படுத்துவதில் உதவும் எனலாம்.
