Retirement FIRE
காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிட இதை செய்யுங்கள்..!
இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என தொடர்ந்து பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக இரவு பகல் பாராமல் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனாலும் அது போதுமானதாக இருக்கிறதா? என்றால் நிச்சயம் இல்லை.
உலகின் பங்குச் சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட், 'நீங்கள் தூங்கும் போது பணம் சம்பாதிக்க சரியானதொரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நீங்கள் சாகும் வரையில் வேலை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
உங்கள் பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும்...!
உண்மையில் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். அந்தப் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைக்க வேண்டும். அது நீங்கள் உறங்கும் போது கூட உங்களுக்கு லாபத்தை சம்பாதித்து தர வேண்டும். இதை தான் செயலற்ற வருமானம் (Passive Income) என்பார்கள்.
இந்தச் செயலற்ற வருமானம் அப்படி செய்யாவிடில் காலம் முழுக்க உங்கள் பணத் தேவைக்காக வேலை செய்து கொண்டே தான் இருக்க வேண்டும், ஆக சரியான முறையில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்க்கைமுறை (Lifestyle) தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
அதை சரியாக செய்து கொண்டாலே அது உங்கள் வேலை, குடும்பம், ஓய்வுக் காலம் என அனைத்தையும் சுமூகமாக எதிர்கொள்ள பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
மொத்தத்தில் உங்கள் வேலையை சந்தோஷமாக செய்யலாம். ஒரு காலகட்டத்தில் வேலை செய்யாவிட்டாலும், மேற்கண்ட அனைத்தும் உங்களால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கொண்டு செல்ல முடியும் என்றால் அது நல்ல விஷயம் தானே.
அப்படி எந்தப் பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து லாபம் பார்க்க சிறந்த செயலற்ற வருமானம் திட்டங்கள், கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
தேவைக்கு ஏற்ப முதலீடு..!
பொதுவாக இந்த செயலற்ற வருமானம் என்பது அவரவர் தேவையை பொறுத்து முதலீடு செய்ய வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு குடும்ப செலவுகள், தனிப்பட்ட செலவுகள், அலுவலகத் தேவைகள், முதலீடு மற்றும் சேமிப்பு, ஓய்வுக் காலம் என பல தேவைகளுக்காக முதலீடு செய்யலாம். ஆக உங்களின் தேவை என்னவோ அதற்கேற்ப முதலீடு செய்வது சிறந்தது.
இன்றைய பதற்றம் மிகுந்த கார்ப்பரேட் வேலை உலகம், போட்டிகள் நிறைந்த தொழில் வணிக உலகம் ஒருவரை முன் கூட்டியே ஓய்வு பெறத் தூண்டுகிறது. அண்மைக் காலத்தில் ஃபயர் (FIRE - Financially Independent to Retire Early) என்கிற திட்டம் பிரபலமாகிறது. அதாவது, ‘நிதிச் சுதந்திரத்துடன் சீக்கிரமாக ஓய்வு பெறுவதுதான் ஃபயர் ஆகும்.
வழக்கமான 58 அல்லது 60 வயதில் பணி ஓய்வுக்கு பதில் 45, 50 வயதில் பணி ஓய்வு பெற திட்டமிடுவது ஃபயர் ஆகும். பணி காலத்திற்கு பிந்தைய செலவுகளை சமாளிக்க, ஒருவரின் ஆண்டு வருமானத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்து, முன் கூட்டியே ஒரு பெரிய தொகுப்பு நிதியை (Corpus) உருவாக்கி அதன் மூலம் மாதா மாதம் வருமானம் பெற முடியும்.
அப்படி செய்து கொண்டால் ஓய்வுக் காலத்தில் நாம் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இது உங்கள் ஓய்வுக் காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல், நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் நிதிச் சுதந்திரத்தோடு இருக்க பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஃபயர் திட்டத்தின் சில முக்கிய வகைகளை பார்ப்போம்.
1 லீன் ஃபயர்
நீங்கள் உருவாக்கிய ஓய்வுக் கால தொகுப்பு நிதி 1 கோடி ரூபாய் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை சிறந்த செயல்பாடுகளை கொண்டுள்ள டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம், நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 12% வருமானம் கிடைக்கலாம். அதிலிருந்து 8% மட்டுமே வருமானத்தை எடுத்து செலவு செய்து வந்தால், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மாதந்தோறும் 66,000 ரூபாய் கிடைக்கும்.
ஓய்வுக் காலத்தை இந்த தொகைக்குள்ளாக, சிக்கனமாக வாழ முடியும். அதிகபட்ச செலவுகளை தவிர்த்து , வாழ்க்கை செலவினங்களையும் குறைத்துக் கொள்வது அவசியமாகும். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் கிடைக்கும் வருமானத்திற்குள் வாழ வேண்டும். இதை லீன் (Leam FIRE) என்கிறார்கள். 12 வருட வருமானத்தில் 8 சதவிகித தொகையை மட்டும் எடுத்து செலவு செய்வதால், தொகுப்பு நிதி நீண்ட காலத்துக்கு வரும்.
2 நார்மல் ஃபயர்
நார்மல் ஃபயர் (Normal FIRE) என்பது உங்களின் தற்போதைய வாழ்க்கைமுறை போன்றே எதையும் மாற்றிக் கொள்ளாமல், வாழ தேவையான நிதியை உருவாக்கி கொள்வதாகும். உதாரணத்திற்கு நீங்கள் ஆண்டுக்கு மூன்று முறை சுற்றுலா செல்கிறீர்கள், மாதம் ஒரு முறை நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்கிறீர்கள் எனில், அதேபோல பணி ஓய்வுக் காலத்திலும் வெளியே செல்லும் போது செலவிட போதிய நிதி இருக்கும். இங்கு உங்கள் ஓய்வுக் கால தொகுப்பு நிதி 2.5 கோடி ரூபாய் என வைத்துக் கொள்வோம்.
இதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்கும் நிலையில் அதிலிருந்து மாதம் 6% வருமானம் மட்டும் எடுத்து செலவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அதாவது, வருடத்திற்கு 15 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை மாத மாதம் பெற்றுக் கொண்டால் 1.25 லட்சம் ரூபாயாக கிடைக்கும். இதன் மூலம் உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். முதலீடு 10% வளரும் போது, அதிலிருந்து 6% மட்டுமே எடுத்து செலவு செய்யும் போது தொகுப்பு நிதியானது நீண்ட காலத்துக்கு வரும். அடுத்து வரும் ஆண்டுகளில் செலவு தொகையை சிறிது அதிகரித்து கொள்ளும்பட்சத்தில் கூட தொகுப்பு நிதி குறையாமல் இருக்கும்.
3 ஃபேட் ஃபயர்
ஃபேட் ஃபயர் (Fat FIRE) என்பது லீன் ஃபயருக்கு எதிரான ஒன்றாகும். நீங்கள் உங்கள் வாழ்க்கையை ராஜா போல வாழலாம். நினைத்த விஷயங்களை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பூர்த்தி செய்து கொள்ள முடியும். செலவுக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. சுற்றுலா செல்ல வேண்டுமா? உடனடியாக செல்லலாம். பேரன், பேத்திகளுக்கு பரிசு கொடுக்க வேண்டுமா? உடனடியாக செய்யலாம். ஆக மொத்தம் நீங்கள் நினைத்ததைப் போல வாழ மிகப் பெரிய தொகுப்பு நிதி இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, உங்களது ஓய்வுக் கால தொகுப்பு நிதி 4 கோடி ரூபாய் என வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கும் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். 5 சதவிகித வருமானம் என்றால் கூட வருடத்திற்கு 20 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதாவது, மாதத்துக்கு 1.66 லட்சம் ரூபாய் கிடைக்கும். கிடைக்கும் வருமானத்தை விட குறைவான தொகையை எடுத்து செலவு செய்வதால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டு தோறும் எடுக்கும் தொகையை அதிகரித்து கொண்டால் கூட தொகுப்பு நிதி நீண்ட காலத்துக்கு வரும்.
மேற்கண்ட ஃபயர் திட்டங்களில் மாதந்தோறும் வருமானம் கிடைப்பதோடு, உங்கள் தொகுப்பு நிதியும் அப்படியே இருக்கும். இதை உங்களுக்கு பிறகு உங்கள் வாரிசுகளுக்கு கொடுக்க முடியும். இது மிக நல்ல ஆப்ஷன் என்றே கூறலாம்.
முதலீடு தவிர வேறு சில வழிகளிலும் செயலற்ற வருமானத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். அது குறித்து பார்ப்போம்.
வீட்டு வாடகை வருமானம்..!
பெரும்பாலானவர்கள் இன்றைய கால கட்டத்தில் அதிகம் விரும்பும் முக்கிய செயலற்ற வருமானம், வாடகை தான். ஒரு வீட்டை வாங்கி அல்லது கட்டி அதன் மூலம் மாதந்தோறும் வாடகை வருமானம் பெறுவது நடைமுறையில் சர்வ சாதாரணமாக உள்ளது. இதற்கு ஒருமுறை முதலீடு செய்தாலே போதுமானது.
உதாரணத்திற்கு இரு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டை 1.5 கோடி ரூபாய்க்கு சென்னையில் வாங்குகிறீர்கள் எனில், அதற்கு மாதம் சுமார் 25,000 ரூபாய் வாடகை வருமானம் கிடைக்கலாம். சென்னைக்கு வெளியே எனில் வாடகை வருமானம் சிறிது குறைவாக இருக்கலாம். சொத்தின் மதிப்பில் சுமார் 2%-3% மட்டுமே வருமானமாக கிடைக்கலாம். சொத்தின் மதிப்பு ஆண்டுக்கு சுமாராக 3-5 சதவிகிதம் அதிகரிக்க கூடும்.
எனினும் இங்கு நீங்கள் செய்யும் முதலீடு என்பது அதிகம். ஆனால் வருமானம் குறைவு. மேலும் தண்ணீர் வரி, சொத்து வரி, பராமரிப்பு என பல செலவுகளும் இருக்கின்றன. ஆக இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அப்படி கூட்டி கழித்தால் சொத்தை வாடகைக்கு விட்டு வருமானம் பார்ப்பதை விட நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் லாபகரமாக இருக்கும்.
வணிக கட்டடங்கள் மூலம் வருமானம்
வணிக கட்டடங்கள் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம் அதிகம் சுமார் 8-10% என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனினும் இதன் நுணுக்கத்தை தெரிந்து கொண்டு முதலீடு செய்வது அவசியமானது. உதாரணத்திற்கு, அலுவலக கட்டடங்கள், திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விடுவது. சினிமா தியேட்டர்கள் கட்டி விடுவது, ஷாப்பிங் மால்கள் கட்டி வாடகைக்கு விடுவது போன்ற வணிக கட்டடங்களையும் கவனத்தில் கொள்ளலாம். இதில், வாடகை வருமானம் அதிகம் என்றாலும், அழுத்தம் என்பதும் அதிகம். ஆண்டு முழுக்க தொடர்ந்து வாடகை வருமானம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதையும் கவனத்தில் கொண்டு முதலீடு செய்வது நல்லது. இதுபோன்ற வணிக கட்டடங்களை சரியான முறையில் தேர்வு செய்து முதலீடு செய்து விட்டால், வாழ்க்கை முழுவதும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கணிசமான வருமானத்தை பெற முடியும். ஆனால், முதலீட்டுத் தொகை பல கோடி ரூபாயாக இருக்கும்.
ஆன்லைன் வகுப்புகள்..!
நீங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிடத்தக்க துறையில் நல்ல திறன் உடையவர் எனில், அதையே ஒரு வருமான ஆதாரமாகவும் மாற்றிக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு உங்களுக்கு தமிழ் நன்றாக தெரியும், செஸ் நன்றாக விளையாட தெரியும், கராத்தே தெரியும், பல மொழிகள் தெரியும் எனில், அதை வீடியோவாக எடுத்து, ஆன்லைனில் தொடர்ந்து வகுப்புகள் நடத்த முடியும்.
இதற்காக நீங்கள் ஒரு முறை மட்டும் உங்கள் திறமையை முதலீடு செய்ய வேண்டி இருக்கும். மாத சந்தா என்பது போன்ற நல்ல வருமானம் பெற முடியும்.
உதாரணத்திற்கு அன்அகாடமி என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம் வழங்கி வரும் கல்வி சேவையை போன்றது. இதற்காக தொடர்ந்து சில காலம் உங்கள் உழைப்பை கொடுத்தால், அதன் மூலம் தொடர்ந்து உங்கள் வாழ் நாள் முழுவதும் வருமானம் கிடைக்கும்.
புத்தக விற்பனை
உங்களால் ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாக எழுத முடியும். உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள முடியும் எனில், அதை எழுதி புத்தகமாக எழுதி விற்பனை செய்யலாம். அதை நீங்கள் இணைய தளம் மற்றும் அச்சு இதழாக விற்பனை செய்து கொள்ள முடியும். உங்கள் புத்தக விற்பனையை பொறுத்து ராயல்டி வருமானம் தொடர்ந்து கிடைக்கும்.
ஆக உங்களிடம் இருக்கும் பணம், திறமையை வைத்து உங்களால் தொடர்ந்து வருமானம் பார்க்க முடியும். உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் நிதி வளம் பெற வாழ்த்துகள்.
